சுக வாழ்விட்கான உணவே மருந்து மருந்தே உணவு

உணவே மருந்து மருந்தே உணவு


 திருவள்ளுவர் தமது திருக்குறளில் "உணவின்றி அமையாது இவ்வுலகு” என்கிறார்.  அத்தோடு புரட்சிக்‌ கவிஞர்‌ பாரதிதாசன் "தனியொருவனுக்கு உணவின்றேல்‌ இச்சகத்தையே அழித்திடுவோம்‌" என்றார்‌. மானிட வாழ்க்கைக்கு  அடிப்படைத்தேவையாகிய உணவு, உடை, உறையுள்‌ முதலியவற்றுள் முதலிடம்‌ வகிப்பதும்‌ உணவே. இவ்வாறாக மானிடரின் வாழ்க்கை, ஆரோக்கியம், வளர்ச்சி  போன்றவற்றை நிர்ணயிக்கும் காரணியாக இருந்த இவ்வுணவு இன்று பல்வேறுபட்ட பரிணாமங்களில்‌ முக்கியத்துவம்‌ பெறுகிறது.

செல்வங்களிலே சிறந்த செல்வமாகிய சுகதேகியான வாழ்க்கை செல்வத்துக்கு ஆணிவேராக காணப்படுகின்ற இவ்வுணவு இன்றைய நவீன உலகில் ஓர் பிரச்சினையாக கருதும் அளவிட்கு ஓர் விடயமாக அமைந்துள்ளது.

அதாவது போசாக்கின்மை ஒருபுறம் பிரச்சினையாக அமைய அதியூட்டமும்‌ பிரச்சினையாகவே சமகாலத்திலேயே காணப்படுகிறது எனலாம். இதனையே திருக்குறளில் சுமார் 2000 ம் ஆண்டுகளுக்கு முன் என்றோ வள்ளுவனும்  “மிகினும் குறையினும்‌ நோய்‌ செய்யும்‌ உணவு” என்று எடுத்தியம்பியுள்ளார். இன்றைய நிகழ் உலகில் ஏழை, பணக்காரர், சிறுவர், வயோதிபர் என்ற வேறுபாடுகளின்றி அதி உடற்பருமன்‌, உயர் குருதி அமுக்கம், கொலஸ்ரோல்‌, நீரிழிவு, இதயம் சம்பந்தமான  நோய்‌கள்(மாரடைப்பு), புற்று நோய்‌ போன்றன சவாலாயமைய, மறுபக்கத்தில்‌ போசாக்கின்மை(இரும்புச்‌ சத்துக்குறைபாடு, கால்சிய குறைபாடு), குருதிச்‌ சோகை, வயதுக்கேற்ற நிறை இன்மை, மலட்டுத்‌ தன்மை, என்பு மென்மையடைதல்‌ போன்ற நோய் நொடிகளால் மனித குலம்‌ இருலடைந்த உலகுக்கு தள்ளப்பட்டுள்ளமை கண்கூடு.

விஞ்ஞான அறிவியல்‌ தொழில்நுட்ப உபகாரணங்களால் தமது வாழ்வினை வளப்படுத்திக்கொண்ட மனிதனின்‌ இன்றைய யுகத்தில் சுகவாழ்வுக்கு சவாலாகவே உணவு  காணப்படுகிறது.

ஆதி உலகிலே மனிதன்‌ அடிப்படை தேவையாக உணவு கருத்தப்பட்டதன் காரணமாக  உணவைத்‌ தேடி சென்றான். இவ்வாறு தேடி சென்றமையின் விளைவாக, மனித நாகரீகம்‌, மற்றும் கலாசாரம்‌ போன்றவை பல்கிப்பெருகி பல்வகைத்தன்மையினை தோற்றுவித்து, இன்று உலகமயமாதல்‌ காரணமாக ஒற்றுமையைத்‌ தோற்றுவித்துள்ளது. இவ்வாறு இருந்தும்‌ ஒவ்வாரு மனிதனும்‌ ஒரு சிறப்பான அலகு. அச்‌ சிறப்பியல்புகளுக்கேற்ப ஒவ்வொரு மனிதனும் தத்தம்‌ உணவைத்‌ தாமே தேர்வு செய்து உள்ளெடுக்க வேண்டிய பொறுப்பும்‌ தனித்துவமானது.

இங்கு சுவாமி விவேகானந்தர்‌ கூறியதனை நினைவு கூரவேண்டியுள்ளது . அதாவது 

“அறிவின்‌ மேன்மை என்பது பலவற்றையும்‌ கற்றுத்‌ தெரிந்து கொள்வது மட்டுமல்ல ௮தை வாழ்க்கையில்‌ கடைப்பிடிப்பதுதான்‌”


ஆறாம் அறிவாக பகுத்தறிவினை பெற்ற நாம்‌ எவ்வாறு தமக்கு தேவையான உணவை தேர்வு செய்கிறோம்‌?, அதனை எப்படி உண்கிறோம்‌?. அதாவது வாழ்வதட்காக உண்கிறோமா? இல்லை. உண்பதற்காக வாழ்கிறோமா? நிறையுணவு என்பது, வயிற்றை  நிரப்புவதா? அல்லது உடல்‌, உள, சமூக, ஆயுள்‌ விருத்திக்கு அடிப்படையாகாக அமைவதா? என்பன பற்றி அறிந்து, சிந்தித்துச்‌ செயல்பட வேண்டியிருக்கிறது.

முதலில்‌ உணவு பற்றிய முழுமையான அறிவு தேவையாகும். அதாவது, உணவின் கூறுகள், அதன் அளவு, கட்டமைப்பு என்பவற்றுக்கு அப்பால் நான்‌ யார்‌?, எதற்காக உணவு தேவை?, எப்படி எடுக்க வேண்டும்? என்பதைத் தாமே பகுத்தறிந்து உணர வேண்டும். மேலும் சுருங்க கூறின், ஆயுள்காலம்‌, நாடு, வயது, தொழில்‌, உடல்நிலை மட்டுமன்றிப்‌ பண்பாடு, கலாசாரம்‌, மதம்‌ இவற்றுக்‌ கிசைவான உணவுத்‌ தெரிவு மற்றும் உணவின் தன்மை பற்றிய அறிவும்‌ அவசியமாகிறது.

இப்புவி வாழ் உயிர் அங்கிகளுக்கு தமது தேவை என்ன என்பதை இயற்கையாக அறிந்து கொள்ளும் உணர்வு உள்ளது. சாதாரணமாக, மனிதன் ஆரோக்கியமாக மனிதன்‌ இருக்கும் போது அவனது உள்ளுணர்வு அவனுடைய புலன்கள்‌ எது தேவை என்பதை உணர்த்தும்‌, அதேவேளை உடலுக்குச்‌ சிறப்பான தேவைகள்‌ எட்டப்படுகின்ற சமயம் அவற்றின் மேல்‌ விருப்பம் ஏற்படும்‌, உதாரணமாக கூறின், பெண்களுக்கு கர்ப்பிணி காலத்தில் புளிப்புச்சுவையில்‌ விருப்பம் ஏற்படுவது.

மேலும் அசாதாரண சூழ்நிலைகளில் அதாவது நோயுற்று காணப்படுகின்ற போது உள்ளுணர்வு புலன்கள்‌ எது தேவை என்பதையும் உணர்த்தும்‌. விலங்குளுக்கு  இவ்வுணர்கள் இருப்பதை அவதானிக்கலாம். உதாரணமாக பூனையின் வயிற்றில் ஏதேனும் அசாதாரண சூழ்நிலை ஏட்படும் போது குப்பைமேனி மற்றும் அருகு போன்றவற்றை தேடி உண்பது.

எது எவ்வாறு இருப்பினும் மனிதன் தனது மனோ இச்சைகளினால் தவறான உணவு பழக்கவழக்கங்களுக்கு அடிமையானதையே உடல்நல பிரச்சினைக்கு காரணமாய் அமைந்துள்ளது.

மனிதன்‌ உண்ணும்‌ உணவினாலேயே உருவாக்கப்பட்டவன் என்றால்‌ மிகையாகாது.
திருமூலர்‌ தமது திருமந்திரத்தில்‌, " உடலை வளர்த்தேன்‌, உயிர்‌ வளர்தேன்” என்கிறார்‌. உயிர் தன்னை வளர்க்க இவ்வுடல் எனும் கூடு அவசியம்‌, நாம் உண்ணும்‌ உணவின்‌  மூலமாக உடல்‌ வளர இவற்றினூடாக உயிரும்‌, உணர்வும் வளர்கிறது. தேகம், மனம்‌, ஆன்மா இவற்றினை மூலமாக கொண்ட மனிதனுக்கு, ஆயுள்‌, பலம்‌, புத்தி, உணர்வு, நிறம்‌, ஆத்மாபிமானம்‌ யாவற்றையும்‌ கொடுப்பது அவன் உண்ணும்‌ உணவு என்கிறது இந்து மத தத்துவம்‌. எனவே உடலுக்காக மட்டும் உண்ணும் உணவு சுகவாழ்வுக்காக உண்ணும் உணவாக கருதப்படாது.

நம் உடலின் நரம்பு மண்டலத்தினுள் ஏட்படும் ஒவ்வொரு தூண்டலும்‌, உடலினுள் அத்தூண்டலுக்குரிய செயட்பாடுகளை அதிகரிக்கவோ குறைக்கவோ செல்வாக்கு செலுத்துகிறது. அதாவது அனுசேப அவஸேவ செயட்பாடுகளின் மீது செல்வாக்குச்‌ செலுத்துகிறது.

அதுபோலவே உண்ணும் உணவில் ஏட்படுத்தப்படும் இரசாயனச்‌ செயற்பாடுகள்‌ மூலம்  உண்டாகும் தூண்டல்‌ நமது நாவின்‌ உணரிகளால் பகுத்தும் தொகுத்தும் ஏற்படுத்தியிருக்கும்‌ எம்‌ அறிவினால் சுவையாக அறிவிக்கிறது. இது அறுசுவை உணவு நாவுக்கு இனிமையாக இருந்தால்‌, பிடிக்கிறது இல்லையாயின் பிடிக்கவில்லை என எமது ஆளுமையை ஆளுகிறது.

இச்சுவைகள்‌ உணர்வை தாக்குகிறது. இதுவே எம்‌ குணம்‌, மனம்‌, உடல்‌ வளர்ச்சிக்கும்‌ உயிரையும்‌ காக்கிறது. எனவே எதை உணவாக உண்பது? எவ்வளவு சாப்பிடுவது? எப்படிச்‌ சாப்பிடுவது என்பது பற்றிய மனப்பாங்கு மற்றும் அறிவு சுகவாழ்வுக்கு இன்றியமையாதது.


எதை உணவாக உண்ண வேண்டும் ?

  • உடல்‌, மன, ஆத்ம புத்துணர்ச்சிக்கும்‌ அறிவு விருத்திக்குமான உணவு. 
  • சாத்வீக குணத்தைத்‌ தரும்‌ தாவர (கானியம்‌, பழம்‌, காய்கறி, விதைகள்‌) உணவு. 
  • தேசசாத்வீக உணவு - நாம் உயிர்வாழும்‌ சூழலுக்கும்‌ தட்ப வெப்பத்துக்கும்‌ ஏற்ற உணவு, தமது ௬ழலில்‌ கிடைக்கும்‌ தாவர விலங்குப்‌ பொருட்கள்‌. 
  • வயதுக்கும்‌, உயரத்திற்கும்‌, பருமனுக்கும்‌, தொழிலுக்கும்‌ ஏற்ற உணவு.
  • உயிர்ப்பான  இலைக்கறி தாவர (மரக்கறி, பழங்கள்‌) உணவு. 
  • அதிகம்‌ சமைக்காத  உணவுகள்‌ 
  • உடனே பறித்த உணவு கள்‌ (வீட்டுத்‌ தோட்டத்திலிருந்து) 
  • உடன்‌ சமைத்த, பழுதடையாத உணவுகள்‌ (முடிந்தவரை குளிரூட்டிப்‌ பாவனையைக்‌ குறைத்தல்‌) 
  • செயற்கைச்‌ சுவையூட்டி, மணமூட்டிகள்‌, செயற்கை நிறங்கள்‌ சேர்க்காத பல்நிற கலவையான உணவு. 
  • அறுசுவை உணவு, தூய்மையான  உணவு, விகிதாசாரமான உணவு. 

எவ்வளவு உண்ண வேண்டும்?

  • இரைப்பையை நிறைக்கும்‌ அளவுக்கு உண்ணக்கூடாது. உடல்‌ ஏற்கும்‌ அளவில்‌ சமிபாடடையக்கூடிய அளவில்‌ இரைப்பையின்‌ 1/3 பாகம்‌ வெறுமையாகவும்‌, 
  • 1/3 பாகம்‌ உணவும்‌ 
  •  1/3 பாகம்‌ நீரும்‌ - திரவப்‌ பொருளும்‌ நிறையக்கூடியதாக தத்தம்‌ உடல்‌ தேவை, சூழல் , காலத்துக்கு ஏற்ற அளவும்‌ உண்ணவேண்டும்‌. 

எப்படி உண்ண வேண்டும்‌? 

  • அருந்தியது ௮ற்றது போற்றியுண்‌” என வள்ளுவன்‌ வாக்குக்கேற்ப, முன்பு உண்ட உணவு செரித்தபின்‌, பசி ஏற்படும்‌ போது, 
  • "கூழே ஆனாலும்‌ குளித்துக்குடி" சுத்தம்‌ பேணுதல்‌ மட்டுமன்றி உணவுக்‌ கால்வாயின்‌ குருதிச்‌ சுற்றோட்டமானது உடல் குளிரும் போது அதிகப்படுவதால்‌, கீரணத்‌ தொகுதி சுறுசுறும் அடைகிறது.
  • உணவுக்கு மதிப்பளித்து இறைவனை வணங்ஙகிச்‌ சாந்தப்பட்ட மனதுடன்‌, 
  • நல்ல சூழலில்‌ இருந்து, நல்ல சூழல்‌ சுற்றம்‌ அமையாதுவிடின்‌ தனிமையாக இருந்து 
  • ஆறுதலாக வாயிலிட்ட உணவை நன்கு மென்று 
  • ஐந்து புலன்களாலும்‌ சுவைத்து உண்ணவேண்டும்‌. 

அதுவும்‌

 

“ஒருபொழுதுண்பவன்‌ யோகி   இருபொழுதுண்பவன்‌ போகி   மூன்று. பொழுதுண்பவன்‌ ரோகி”

என்ற முதுமொழியை கருத்திலெடுத்து உண்ண வேண்டும் .

கருத்துகள்